டூரிங் டாகீஸ் பற்றி பேசும்போது, எனக்கு வேடிக்கையான சம்பவம் ஒன்று ஞாபகதிற்கு வருகிறது. ராமலிங்க மாமாவின் அம்மா சினிமா பார்த்தது கிடையாது, ஆனால் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆசை. ஆனால், ராமலிங்க மாமாவிற்கோ சினிமா என்றால் கொஞ்சம்கூட பிடிக்காது. ஆகவே, அவர் அம்மாவின் ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. அந்த சமயத்தில்,உப்பு கிரௌண்டில் ஒரு டூரிங் டாக்கீஸ் வந்தது. (கி. மு. மாமாவின் தம்பி நாணாதான் அதன் மானேஜர்). ராமலிங்க மாமாவின் அம்மா அவரிடம், “நம்மாத்து வாசல்லேயே கொட்டகை வந்திருக்கிறது. அங்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகமாட்டாயா?” என்று கேட்டாள். அதற்கு ராமளலிங்க மாமா, ”சரி, வா கூட்டிக்கொண்டு போகிறேன். ஆனால், நான் உள்ளே வரமாட்டேன். உன்னைக் கொண்டு விடுகிறேன். முடியும் போது நான் வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்”. அம்மாவும் ‘சரி’ என சொல்லவே, அவர் அம்மாவைக்கூட்டிகொண்டு சென்றார். உயர்ந்த கிளாஸ் டிக்கெட் வாங்கி, அம்மாவை சோபாவில் உட்கார்த்திவிட்டு வந்தார். “சினிமா முடிந்தவுடன் நீ இங்கேயே இரு. நான் வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தார்.
சினிமா முடிந்தவுடன், அம்மாவை அழைத்து வர கொட்டகைக்குள் சென்றார். ஆனால், அங்கு சீட்டில் அம்மாவை காணவில்லை. அவருக்கு ‘பக்’கேன ஆகிவிட்டது. அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தார். கடைசியில், அம்மா ஸ்க்ரீன் முன்னால் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். “என்னம்மா, நான் சோபா சீட் வாங்கித் தந்தேன் நீ என்ன இங்கு தரையில் வந்து உட்கார்ந்திருக்கிறாய்?” என கேட்டார். அதற்கு அவர் அம்மா ரகசியமான குரலில், “சத்தம் போடதே! கொட்டகைக்காரன் உன்னை ஏமாத்திட்டான் நிறைய காசு வாங்கிக் கொண்டு, பின்னாலே தள்ளி சீட் தந்துட்டான்! நான் அவனுக்கு தெரியாமல் மொள்ள முன்னால் வந்து உட்கார்ந்துவிட்டேன்.” என்றாள்.
இதை, ராமலிங்க மாமா எங்களிடம் சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்!
Comments
Post a Comment